கடந்த 2008,2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சிறிலங்கா கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
வசந்த கரன்னகொடவை விசாரிப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதை அடுத்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வசந்த கரன்னகொட கடற்படை தளபதியாக கடமையாற்றிய காலத்தில் 5 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்கள் வெலிசறை, கோட்டை மற்றும் திருகோணமலை நிலத்தடி முகாம் ஆகிய கடற்படையின் கட்டப்பாட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இவர்களது விடுதலை தொடர்பில் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்க வேண்டுமென கடந்த வழக்கு விசாரணையின்போது கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.