வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தமது அரசியல் நடவடிக்கை அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடாத்திய சந்திப்பை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மீண்டும் தமது தமிழீழக் கனவை அடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்கட்சியினர் உருவாக்கவுள்ள புதிய அரசியல் அமைப்பிற்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம் அமைப்பொன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை கூட்டு எதிரணி என்று கூறிக்கொள்ளும் தரப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, தமிழருக்கு வழங்கப்பட வேண்டிய இறுதித் தீர்வு 13ஆவது திருத்தச் சட்டமே என்றும், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13ஆவது திருத்தத்திற்குள் இருக்கும் காணி, காவல்த்துறை அதிகாரங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் அது முழுமையான 13 ஆக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காவல்த்துறை அதிகாரம் என்பது மத்திய அரசின் கீழான காவல்த்துறை அதிகாரம் போல் அல்ல என்பதனால், காவல்த்துறை அதிகாரம் வழங்குவது தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், 13 என்பது ஒற்றையாட்சிக்குள்தான் உள்ளது என்றும், ஒற்றையாட்சியைப் பாதுகாத்துக் கொண்டுதான் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனால் ஏனைய மாகாணங்களைப் போல வடக்கு, கிழக்குக்கும் அதிகாரங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.