அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளையும், உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் தாம் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஃபி்லிப்போ க்ரான்டி(Filipo Grandi) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரத்தின் 67 வது அமர்வு நடைபெற்றபோது, இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவீநாத ஆரியசிங்க இலங்கையின் கொள்கைகளை விளக்கிய பின்னரே, க்ரான்டி தமது இந்த வெளிப்பாட்டை அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு திரும்பி வரும் அகதிகளுக்கு தேவையான உதவிகளை இலங்கை அரசாங்கம் வழங்கும் எனவும், அவர்களை மீண்டும் குடியமர்த்தல் மற்றும் வாழ்தலுக்கான உதவிகளை இலங்கை அரசாங்கம் செய்துக்கொடுக்கிறது என்றும் ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த திட்டங்களுக்கு வெளிநாடுகளின் ஆதரவு அவசியம் என்றும் ஆரியசிங்க தெரிவித்திருந்த நிலையிலேயே, நாடற்றதன்மையை இல்லதொழிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியன எனவும், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் உதவுதல் மற்றும் இடம்பெயர் மக்களுக்கு நலன்களை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.