இலங்கையில் அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பில் முழுமையான அதிகாரப்பகிர்வை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்துள்ளது.
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள சுவிட்சர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர் தலைமையிலான தூதுக்குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் சபாநாயகர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த சந்திப்பின்போதே சுவிட்சர்லாந்து தூதுக்குழுவினர் குறித்த உத்தரவாதத்தை வழங்கியிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து போராடி வருவதாகவும், இந்த நிலையில் நேற்றைய சந்திப்பானது மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சுவிட்சர்லாந்தில் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் முழுமையாக பகிரப்பட வேண்டுமாயின், நிதி கையாளுகை தொடர்பான அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும், அப்போதே பூரண அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படும் என்று சுவிஸ் தூதுக்குழுவினர் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் மீள்கட்டுமான உதவிகள் தொடரும் எனவும் சுவிஸ் குழுவினர் உறுதியளித்துள்ளதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.