இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இலங்கை சமூகத்தினருடனான மங்கள சமரவீரவின் இந்த சந்திப்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பௌத்த விகாரைகளில் தேரர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ரோமா டி சொய்சா என்ற பெண், கேட்கும் அனைத்தையும் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மங்கள சமரவீர, பிரிவினைவாதத்திற்கு நாட்டில் இடமில்லை என்ற போதிலும், சமஷ்டி முறையிலான தீர்வுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முதன் முறையாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.