இலங்கையின் உத்தேச புதிய தேர்தல் முறையில் பல சந்தேகங்கள் உள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கொழும்பில் உள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடாத்திய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மூன்றாவது கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆற்றிய உரையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களையும், மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அனைத்துமாக 50 சிறுபான்மையின பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என்ற நிலையில், உத்தேச தேர்தல் முறையின் மூலம் இந்த எண்ணிக்கையானோரைப் பெற்றுக் கொள்ள முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த புதிய தேர்தல் முறைமூலம் உரிய ஆசனங்களை பெறுகின்ற சிறுபான்மையினரின் வாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்பதனாலேயே, அதன் வகையராக்களையும், குறைபாடுகளையும் அடையாளங் காண வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கலப்புத் தேர்தல் முறையானது ஏற்கனவே உள்ளுராட்சித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை தாம் முறையை அனுபவ ரீதியாக பரீட்சித்து பார்க்கவில்லை என்றும், அதனால் அது பற்றி விளக்கமாகப் பேச வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அறிமுகப்படுத்துகின்ற அதே முறையையே ஏனைய தேர்தல்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் , தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு உரிய நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனை விடுத்து இனம், மதம் இல்லாமல் ஒரே இலங்கையராக செயற்படுவோம் என கூறுவது கபடத்தனமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தொகுதிகள் குறைக்கப்படுகின்றமையானது சிறுபான்மையினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் விபரித்துள்ளார்.