2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் இடம்பெறாத போதிலும், தமிழ் மக்களுடைய நிலமும் வளமும் மாற்று இனத்தவர்களால் சத்தமில்லாமல் சூறையாடப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு இனத்தின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டுமானால், அந்த இனத்தின் கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாக்க ஆலயங்களும் அதனூடான சமூகங்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்த ஒழுக்கம் முள்ளிவாய்காலுடன் மரணித்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களில் மதுபான பாவனைகள் ,கலாசார சீர்கேடுகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோ நிலை என்பன அதிகரித்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் வன்முறை, வாள்வெட்டு என சமூக சீர்கேடுகள் அன்றாடம் சர்வ சாதரணமாகி உள்ளதை ஊடகங்களில் நாளும் வரும் செய்திகளில் காணமுடிவதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இவ்வாறான தீய விளைவுகளில் இருந்து மக்களை மீட்க ஆலயங்கள், கலாசார நிகழ்வுகள் மூலமாக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்றும், கல்வியுடன் ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு கட்டாயமானதாக ஊட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டக்கொண்டுள்ளார்.