கனடாவின் சுகாதார பராமரிப்புத் திட்டம் பாதகமான ஒன்று எனவும், அதில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிபர் தேர்தலை முன்னிட்டு சென். லூயிசில் உள்ள வோசிங்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இரண்டாவது நேரடி விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிகவும் குறைபாடுகளைக் கொண்டுள்ள பொது சுகாதாரத் திட்டத்திற்கு கனேடிய சுகாதாரத் திட்டம் உதாரணம் எனவும், அது பல்வேறு வழிகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் சுகாதாரத்துறையில் பல்வேறு குறைபாடுகளும், தாமதங்களும் காணப்படுவதனால் கனேடியர்கள் தமது முக்கிய சிகிச்சைகளை மே்றகொள்வதற்கு அமெரிக்காவுக்கு வரவேண்டியுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தனது விவாதத்தின் போது பல தடவைகள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில், சுமார் 52,000 கனேடியர்கள் அவசரமற்ற சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதனையும் அவர் தனது விவாதத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ஆம் ஆண்டில் நரம்பியல் சிகிச்சைகளுக்காக 2.6 சதவீதம் கனேடியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், ட்ரம்பின் கூற்றுக்கு ஆதாரமளிக்கும் வகையில், அவர்களில் எவ்வளவு பேர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர் என்ற விபரங்கள் எவையும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.