நேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Bovaird drive மற்றும் Gillingham drive பகுதியில் நேற்று இரவு 8.45 அளவில் இந்த விபத்து சம்பவித்ததனை பீல் பிராந்திய காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதனால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், விபத்துக்கான காரணங்கள் எவையும் உடனடியாக தெளிவாகவில்லை என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, ஒன்றுடன் ஒன்று மோதிய வாகனங்கள் இரண்டும் தீப்பிடித்து எரிந்தவண்ணம் காணப்பட்டதாக அவசர மீட்புப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எனினும் துர்ரதிஸ்டவசமாக இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பதனை மட்டுமே தற்போதைக்கு தம்மால் உறுதிப்படுத்த முடிவதாக பீல் பிராந்திய காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பெயர் விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், ஒரு வாகனத்தின் சாரதியான 49 வயது ஆணும், மற்றைய வாகனத்தின சாரதியான 24 வயது ஆண், மற்றும் 22, 16 வயதுடைய இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தினை தொடர்ந்து அந்த பகுதி ஊடான போக்கவரத்துகளைத் தடை செய்துள்ள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.