இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லையென சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரிடம் வட மாகாண அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இலங்கைக்கான 10 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் அவர், வடமாகாணத்தின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோரையும் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
வட மாகாணசபை அலுவலகத்தில் சுமார் 45 நிமிட நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, வடபகுதி மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிகாரி விரிவாக கேட்டறிந்து கொண்டதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளான காணிகளை மீளளித்தல், மீள்குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றும், இந்த நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது எனவும் வடமாகாண அமைச்சர்கள் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..