கனடாவின் ஸ்காபரோ நகரில் மிட்லண்ட் – எக்ளிண்டன் சந்திப்பில் நேற்று (12) புதன் கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது சமிக்ஞைகளையும் பொருட்படுத்தாது மிகவும் வேகமாக பயணித்த வெள்ளை நிற BMW வகை கார் ஒன்று மோதிய விபத்தில், குறித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் காலையில் குறித்த பகுதியில் வீதியின் சில தடங்களை மூடிவிட்டு, பொலிசாரின் சமிக்ஞை உதவியுடன் வீதி செப்பனிடல் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இதன் போது மிட்லண்ட் வீதியில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வெள்ளை நிற BMW வகை கார் எக்ளிண்டன் அவனியு பகுதியில் இந்த விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது
இந்த விபத்தில் 41 வயதுடைய வீதி திருத்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஸ்தலத்திலையே பலியாகினார். இதனை தொடர்ந்து அந்த பகுதியினூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் இரவு 8.30 மணி வரை தடை செய்யப்பட்டு, விஷேட விசாரணை அதிகாரிகள் அடங்கிய வெவ்வேறு விசாரணை குழுக்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படடன.
இதுவரை குறித்த விபத்தினை ஏற்படுத்தியவரை அடையாளம் காண முடியவில்லை எனவும், குறித்த விபத்தினை ஏற்படுத்திய கார் இறுதியாக Gilder Drive இல் வடக்கு நோக்கி பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அந்த பகுதியில் பயன்பாட்டிலிருந்த வீடியோ கமரா பதிவுகளை எதிர்பார்ப்பதாகவும், இதுபற்றிய மேலதிக தகவல் தெரிந்தோர் தம்மை தொடர்புகொள்ளுமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.