இலஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள் தொடர்பில் இலங்கை சனாதிபதி வெளியிட்ட கருத்துக்களுக்கு பரவலாக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றியிருந்த இலங்கை சனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதனை அடுத்து அவரின் அந்த கருத்துக்களுக்கு சிவில் சமூக அமைப்பு மற்றும் அரசியல் தலைமைகள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
“ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்” எனப்படும் அனைத்துலக வெளிப்படை அமைப்பு சார்பில் கண்டனங்களை வெளியிட்டுள்ள அதன் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ், இலஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள் மீது கடுமையான தொனியில் சனாதிபதி விமர்சனங்களை வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகார சனாதிபதி என்ற ரீதியில் சனாதிபதி இவ்வாறு விமர்சனம் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரான கருத்துக்களை சனாதிபதி மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை மைத்ரிபால சிறிசேனவின் உரை தொடர்பில் நேற்றிரவே அவருக்கு சனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர் என்றும், சனாதிபதியின் உரைக்கு கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ள இவர்கள், இது தொடர்பில் நாளை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் தீர்மானித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, நவ சம சமாஜக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் சனாதிபதியின் கருத்துக்களுக்கு தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
சனாதிபதியின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்களின் அழுத்தங்கள் காரணமாகவே 19ம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான ஓர் நிறுவனத்தை மலினப்படுத்தும் வகையில் சனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியன அல்ல எனவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இதுவரை நடாத்தி வந்த விசாரணை நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுத்துச் செல்லுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிமோசடி விசாரணைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோருடன் நடாத்தப்பட்ட சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சனாதிபதி நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக போவதாக தில்ருக்ஷி விக்ரமசிங்க பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.