சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த வழக்கில் சட்டவாளர்களே பின்னணியில் இருந்துள்ள நிலையில், அவர்களைப் பற்றி அதுவரை தனக்குத் தெரியாது எனவும், அன்று காலை தான் இந்த வழக்குத் தொடர்பில் அறிந்ததாகவும் அவர் தெரிவித்து்ளளார்.
பல்வேறு நோக்கங்களுக்காக சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு ஒரு கொள்கை இருப்பதாகவம், இந்த சுதந்திர ஆணைக்குழுக்களில் உள்ளவர்கள் தமது விடயப் பரப்பை அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் யோசிக்காமல் தவறான முடிவுகளை எடுக்கும் போது, தேசிய பாதுகாப்பு, இராணுவ நிர்வாகம், முகாமைத்துவம் பற்றி அறிந்திருப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற விடயங்களில் குறித்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் எனக்குத் தெரியப்படுத்த வேண்டிய உரிமையும் பொறுப்பும் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவன்ட் கார்ட் வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிலர் தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துவதாகவும், நீதித்துறையில் தலையீடு செய்வதற்காகவோ, சுதந்திர ஆணைக்குழுக்களில் தலையீடு செய்வதற்காகவோ, வல்லுறவுக் குற்றவாளிகளை விடுவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவோ தான் சனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை மீளமைக்கவும், நீதிச் சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவுமே தான் தெரிவு செய்யப்பட்டதாகவும், தனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் தான் மண்டியிடப் போவதில்லை எனவும், பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்பதுட்ன, ஏனையவர்கள் அவ்வாறு செயற்பட அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களைப் பிணையில் விடுவித்து வழக்கை நடத்துமாறும், அல்லது அவர்கள் தவறு செய்யாவிட்டால் விடுவிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் இந்த விடயங்களை பகிரங்கமாக பேசவில்லை என்ற போதிலும், இப்போது அதுபற்றிப் பேச வேண்டியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.