கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் மிகக் கொடூரமான போர் இடம்பெற்றுவரும் நிலையில், அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை கனடா தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அரிதான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ள கனேடிய பேராளர்கள், சிரிய விவகாரம் தொடர்பில் அனைத்து 193 நாடுகளையும் ஒன்றுபடுத்தி பேச்சுக்களை நடாத்த வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக சிரியப் போரில் பங்கேற்றுள்ள முக்கிய தரப்புக்கள் அனைத்தின் மீதும், வன்முறைகளை நிறுத்துமாறு இந்த 193 நாடுகள் மூலமாகவும் அழுத்தங்களை பிரியோகிப்பது குறித்த யோசனையையும், வேண்டுகோளையும் ஐ.நா பொதுச் சபையின் தலைவரிடம் கனடா முன்வைத்துள்ளது.
இந்த போரை நிறுத்துவதற்கு ஐ.நா பாதுகாப்பு மன்றமும் தவறிவிட்டுள்ளதனை சுட்டிக்காட்டும் இந்த வேண்டுகோள் கடிதத்தில், கனடாவுடன் ஏனைய 68 நாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆறு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் சிரிய மோதல்கள் மிகவும் மோசமான கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தம் தொடர்பிலான தீர்மானம் ஒன்றுக்கு ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்தும் நிலையில், கனடா இவ்வாறான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா பாதுகாப்பு மன்றமானது தனது அடிப்படை கடப்பாடான அமைதி, பாதுகாப்பு என்பதனை நிலைநாட்டத் தவறியுள்ள நிலையில், ஐ.நா பொதுச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இது தொடர்பில் கலந்துரையாடி, அமைதிக்காக ஒன்றுபடுதலின் அடிப்படையில் சிறப்பு கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய முடியும் எனவும் குறித்த அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதய நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஐ.நா உறுப்பு நாடுகளின் பொறுமை எல்லை தாண்டிச் செல்வதாகவே தாம் உணர்வதாக ஐ.நாவுக்கான கனேடிய குழுவின் துணை நிரந்தரப் பிரதிநிதி மைக்கல் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து உறுப்பு நாடுகளும் தமது குரலினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும், சிரிய மக்கள் எதிர்கெர்ணடுவரும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவருவதே அனைவரதும் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.