ஐக்கிய நாடுகளின் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் நலன் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையில் சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை, ஐக்கிய நாடுகளில் சமர்ப்பிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள், படையினருடைய இருப்பிடங்களும் அவற்றால் மக்களது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் விதம், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வேலையில்லாப் பிரச்சினைகள் மற்றும் விதவைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரின் கவனத்துக்க்கு கொண்டு சென்றுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி வகுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவரான முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை புதிய அரசியல் திருத்தின் ஊடாக சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், இதுவரை காலமும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் இருந்துவரும் இழுத்தடிப்பு நிறுத்தப்பட்டு உடனடியாக எந்தவித பேச்சுவார்த்தைகளுமின்றி மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்கள் முழமையாக வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வலியுறத்தியுள்ளதாக கூறப்படுகிறது.