காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியறுத்தி தமிழகத்தில் நேற்று ஆரம்பமான 48 மணிநேர தொடருந்து மறியல் போராட்டம் இன்று 2 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு இடங்களிலும் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பி தொடருந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்காணவர்களை காவல்த்துறையினர் இன்றும் கைதுசெய்துள்ளனர்.
மதுரையில் மறியல் போராட்டம் நடாத்திய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி என்பவற்றைச் சேர்ந்த 700இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றின் நீரை திறந்து விடுவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்கைகளைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து , மேலாண்மை வாரியம் அமைக்க பிறப்பித்த அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தொடருந்து மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.