ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் கஜேந்திரன், மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் மற்றும் தென்னிலங்கை ஊடக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊடக சுதந்திரம் மற்றும் காவல்த்துறை அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும், காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்க்பபடும் நிலையில், அதன் ஒரு கட்டமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு முன்னராக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூர்ந்து இன்று காலையில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
ஊடகவியலாளர்களின் நினைவாக யாழில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் ஊடகவியலாளர் நிமலராஜனின் உருவப்படம் வைக்கப்பட்டு அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரண்டு நிமிடங்கள் மௌன வணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், விந்தன் கனகரட்னம், தென்னிலங்கை ஊடக செயற்பாட்டாளரான பிரடி கமகே, நிமலராஜனின் ஆரம்பகால ஊடக நண்பர்கள், தென்னிலங்கை ஊடக பிரதானிகள் மற்றும் ஊடக நண்பர்கள் என பலர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.