பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் சமூகத்தினரை பெரிதும் பாதித்துள்ளதாக சிறுபான்மையின சமூகத்தினரின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான 10 நாள் பயணத்தின் நிறைவில் இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுகின்றமை சமமற்ற முறையில் தமிழ் சமூகத்தை பாதித்துள்ளது என்றும், உரிய நடைமுறைகள் இல்லாமல் காலவரையறையின்றி தடுத்து வைக்கும் வகையிலான குறித்த சட்டம் தொடர்பில் தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன என்றும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் முக்கியமானதும் கரிசனையுள்ளதுமான ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இது நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தின் கடப்பாடாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டம் அனைத்துலக தரங்களை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுகாட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு படையாகவே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினால் நோக்கப்படுவதாகவும், அதேபோல் தமிழர்களையும் இராணுவம் இன்னமும் ஆயுததாரிகளாகவே தொடர்ந்தும் அடையாளப்படுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது வழங்கிய உறுதிமொழிகளை தற்போதைய தேசிய அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையில் மனித உரிமைகள், பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமை, உண்மையை கண்டறிவதற்கான உரிமை, நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கான உரிமை, மற்றும் நட்டஈடு போன்ற நான்கு அடிப்படை விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக குறித்த தீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு சமூகங்களின் ஒத்துழைப்புடன் 2015 ஆம் ஆண்டு தேசிய கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்றும், அதன் மூலம் நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் தொடர்பான புதிய நம்பிக்கை ஏற்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நல்லிணக்க பொறி முறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுடன் இணைந்து முன்னோக்கி செல்வதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறை, அனைத்து சமூகங்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை உள்ளடக்கிய நம்பிக்கையை ஈர்க்கும் பொறி முறையின் உருவாக்கம் மற்றும் நீண்டகாலமாக காத்திருக்கும் இந்த பொறிமுறைகள் தமக்கானது என்ற உரித்துடன் அணுகுதல் போன்றவற்றுக்கு குறித்த சுயாதீன நிறுவனங்களை அமைப்பது அத்தியாவசியமானது என்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.