மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள புனானை பிள்ளையார் ஆலய விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு – பொலநறுவ நெடுஞ்சாலையிலுள்ள புனானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் போருக்கு பின்னர் புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த வழிபாட்டு தலமொன்றும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீள்குடியேறிய மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மீளக்குடியேறிய தமிழ் மக்கள் சுமார் 5 – 6 ஆண்டுகளாக தமது ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வந்த போதிலும், அங்குள்ள இராணுவமும் பௌத்த பிக்குவும் தடையாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, இராணுவ அதிகாரி, பிரதேச செயலக காணி அதிகாரி ஆகியோரிடையே இது தொடாபில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.
அதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு 40 பேர்ச் காணியும், பௌத்த வழிபாட்டு மையத்திற்கு 60 பேர்ச் காணியும் அளவை செய்து எல்லையிட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக புனானை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
1971ம் ஆண்டு தொடக்கம் அந்த இடத்தில் புத்தர் சிலை இருந்துள்ளதாக புனானை பௌத்த வழிபாட்டு மையத்தை சேர்ந்த அளவை பித்தாலங்கா தேரோ இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தாங்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையிலேயே குறித்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் ஒரு சில சிங்கள குடும்பங்களின் குடியிருப்புகள் இருந்த போதிலும், அங்கு பௌத்த வழிபாட்டு மையங்கள் எவையும் இருக்கவில்லை என்றும் புனானை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் அநுராதபுரத்தில் தாக்குதலுக்கு உள்ளான சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு யாழ்.சிவசேனை குழுவினர் நேற்று நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து உள்ளதுடன், தாக்குதலுக்கு இலக்கான இளைஞரையும் சந்தித்துள்ளனர்.
ஆளுநரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் , அனுராதபுர நீராவிக் காவல் நிலையப் பொறுப்திகாரி, செயந்திபுர புத்த தவத்திரு மகாநாயக்க தேரர், அருள்மிகு கதிரேசன் கோயில் தவத்திரு பூசகர், மற்றும் அமைதிக் குழு செயசிங்க ஆகியோருடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடாபில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க என யாழ்ப்பாண மருத்துவர் குழு வழங்கியிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கையளித்துள்ளனர்.
அத்துடன் தாக்குதல் சம்பவத்தின் போது உடைக்கப்பட்ட மூன்று அடி உயரமுள்ள கருங்கற் சிலைகளான நாகபூசணி அம்மன் சிலை மற்றும் முருகன் சிலைகள் என்பவற்றினை மீளமைத்து கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் யாழ்.சிவசேனை குழு உறுதி வழங்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.