கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளையும், நாளைமறுநாளும் பல்வேறு தரப்பினராலும் போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை திங்கட்கிழமை நாடெங்கிலுமுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறே கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நாளை பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மாணவாகளின் இந்த கொலையைக் கண்டித்து முன்னெடுக்கப்படவுள்ள இந்த பேரணி நாளை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி அரச அதிபர் செயலகத்தை சென்றடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை மறு நாள் வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடனும் இன்று நடாத்தப்பட்ட கூட்டத்தை அடுத்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்த முழுஅடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளது.