வாள் வெட்டுக்குழு என நினைத்தே உந்துருளியில் சென்றவர்கள் மீது காவல்த்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என யாழ்.பிராந்திய மூத்த காவல்த்துறை அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உந்துருளியில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை என்றும், அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து காவல்த்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நிறுத்துமாறு காவல்த்துறையினர் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் காவல்த்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று தான் முதலில் கூறப்பட்டது என்றும், உடல் கூற்று பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட விடயம் தமக்கு தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மாணவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவ்ம் தொடர்பில் காவல்த்துறையினரின் நடவடிக்கை தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
சம்பவத்தின் போது அந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்து இருந்த நிலையில், அங்கு சோதனை நடாத்திய தடயவியல் காவல்த்துறையினரிடம் துப்பாக்கிச் சன்னத்தின் வெற்றுக் கோதுகள் ஒன்று கூட அகப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் , நிச்சயமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் வெற்றுக் கோதுகள் கிடந்தது இருக்க வேண்டும் என்கின்ற நிலையில், அவை அங்கிருந்து அகற்றப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்றியவர்கள் யார் எனவும், அதிகாலை வேளை தேடுதல் நடாத்திய காவல்த்துறையினரா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற இடத்தை சுற்றி அடையாளப்படுத்த்தி தடயங்களை பாதுகாக்காது, காங்கேசன்துறை வீதியில் குளப்பிட்டி சந்தியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரையில் உள்ள பகுதியை குற்ற பிரதேசமாக காவல்த்துறையினர் அடையாளப்படுத்தி இருந்துள்ளனர் என்ற பல்வேறு சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.