பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டப் பதவியை ஒன்றை உருவாக்குவதில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக சனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் இராணுவத் தரப்புகள் மீது அண்மையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளினால் ஏற்பட்டுள்ள கரிசனைகளை அடுத்தே, இந்தப் புதிய பதவியை உருவாக்குவது குறித்து சனாதிபதி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள், கொலைகள் தொடர்பாக சிறிலங்கா படையினர் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விவகாரங்களைக் கையாள்வற்காக, நம்பிக்கையான ஒருவரை பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்க சனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சு சனாதிபதியாலேயே கையாளப்பட வேண்டும என்பதுடன், போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இலங்கையின் சனாதிபதியே ஐ.நாவுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நெருக்கமானதும் காத்திரமானதுமான தொடர்புகளை வைத்திருக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய பதவி உருவாக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.