இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘மான்புக்கர் விருது’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி செல்அவுட்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
289 பக்கங்களை கொண்ட இந்த நாவலுக்கு நேற்று இலண்டன் நகரில் நடைபெற்ற விழாவில் கார்ன்வால் இளவரசி கமிலா பார்க்கர் மான்புக்கர் விருதுடன் 50 ஆயிரம் பவுண்டு ரொக்கப் பணத்தையும் வழங்கியுள்ளார்.
ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்த பால் பீட்டியின் இந்த புதினம், புதிய நவீன நையாண்டி வகையைச் சேர்ந்தது என்றும், இது இனவாதம் என்ற பிரச்சனையை அறிவு, பெரும் ஆர்வம் மற்றும் கடுமையான எச்சரிக்கை தொனி போன்றவற்றைக் கொண்டு அணுகியுள்ளதாகவும் குறித்த விருதுக்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆங்கில நாவல்களில் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படுவது கடந்த 48 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டன், அயர்லாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு மட்டுமே இந்தப் விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புதினங்களுக்கான மதிப்புமிக்க விருது ஒரு அமெரிக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் பெருமைக்குரிய இந்தப் பரிசை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.