சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மங்கள சமரவீர, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு என்பன குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திபொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சுக் கட்டத்தொகுதியில் நேற்றைய நாள் நடாத்தியிருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவா, சமஷ்டி என்பது நாட்டைப் பிரிக்கும் செயல் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், சமஷ்டியை காட்டி சில குழுக்கள் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1997ஆம் ஆண்டில் அப்போதைய சனாதிபதி சந்திரிகா காலத்தில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் கொண்டுவரப்பட்டிருந்த அரசியல் யாப்பே சமஷ்டியை வலியுறுத்தியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த அரசியல் யாப்பு பல சிக்கல்களை கொண்டுள்ளது என்பதன் காரணமாக, பிரிக்கப்படாத நாட்டில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஒரு அரசியல் யாப்பை கொண்டுவரவே தாம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாட்டின் சகல மக்களுக்கும் ஏற்புடையதாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான அரசியல் யாப்பினை உருவாக்கவே தாம் முயற்சிகளில் ஈடபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.