மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஊடாக இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் கடந்த 23ஆம் நாள் ஆரம்பமாகிய அனைத்துலக நாடாளுமன்ற சங்கத்தின் 135ஆவது கூட்டத் தொடரில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முரண்பாடு காணப்பட்ட காலத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு என்ற தலைப்பில் அனைத்துலக நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதன்போது அங்கு உரையாற்றிய இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர், மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஊடாக இலங்கையில் சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் முரண்பாட்டு நிலைமைகளை தடுத்தல் என்பவை தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தொடரில் இலங்கை சார்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ரோகினி விஜேரத்ன, வேலுகுமார் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.