வடக்கில் பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, குறித்த சந்தர்ப்பத்தில் காவல்த்துறையினரின் மனநிலை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர், சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்த்துறையினரின் கட்டளையை ஏற்று வாகனத்தை நிறுத்தாமல் சென்றதனாலேயே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் செல்லும் போது, காவல்த்துறையினரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், இத்தகைய ஒரு தருணத்திலேயே காவல்த்துறையினர் வானத்தை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கி சூடே குறித்த மாணவனை தாக்கியதா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிலளிப்புக்களைத் தொடர்ந்து, பல்கலைகழக மாணவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாக கூறப்படும் ஆவாக் குழுவிற்கும் புலனாய்வுத் துறைக்கும் இடையில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு தொடர்பிலும் பல்வேறு கேள்விகளை ஊடகவியாளர்கள் எழுப்பியிருந்தனர்.
ஆனால் அவற்றிற்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் ரத்நாயக்க, குறித்த ஊடக மாநாட்டில் இருந்து திடீரென எழுந்துச் வெளியேறிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.