கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியுத்திற்கும் இடையேயான சீட்டா எனப்படும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுவதற்கு தடையாக இருந்துவந்த பெல்ஜிய பிராந்திய விவகாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஒப்பந்த நடவடிக்கைகள் மீண்டும் சாதகமான பாதைக்கு திரும்பியுள்ளது.
சீட்டா உடன்படிக்கை நேற்று கைச்சாத்தாவதாக முன்னர் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், பெல்ஜியத்தின் ஒரு பகுதியினர் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, கடந்த சில வாரங்களாகவே ஒப்பந்தம் தொடர்பிலான இழுபறி நிலை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பெல்ஜிய அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளின் பலனாக, குறித்த அந்த இழுபறி நிலைக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய அரசாங்கம், இந்த ஒப்பந்தம் குறித்த விவகாரம் சாதகமான பாதைக்குத் திரும்பியுள்ளமை குறித்து மகிழச்சி வெளியிட்டுள்ளதுடன், இந்த உடப்பாட்டினைக் கைச்சாத்திடுவதற்கு இன்னமும் சில காரியங்கள் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய தர மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் மேம்பாட்டினையும் ஏற்படுத்தவல்ல இந்த ஒப்பந்தத்தினை ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொள்வதற்கு கனடா தொடர்ந்தும் தயாராகவே உள்ளதாக வர்த்தகத் துறை அமைச்சரின் பேச்சாளர் அலெக்ஸ் லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.