பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகின.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் கடந்த மாதம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பி்டத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு ஆண்டு பூர்தியாகவுள்ள நிலையில், எந்தவித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது, பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்கூட இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.