வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் ஆவா உள்ளிட்ட ஆறு பாதாள குழுக்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் வடக்கில் இடம்பெற்ற சமூகவிரோத செயற்பாடுகளுக்கு பின்னால் ஆவா என்ற பாதாள குழு இருப்பதாக தெரிவிக்கப்பட்டும் நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், இவ்வாறான சமூகவிரோத குழுக்களை கட்டுப்படுத்த மூன்று சிறப்பு காவல்த்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆவா குழுவுக்கு அப்பால் நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்றும் சன்னா ஆகிய பெயர்களில் குடா நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக வட பிராந்தியத்தின் மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் நாட்களில் யாழ். குடா நாட்டில் தேடுதல் வேட்டை இடம்பெறவுள்ளதாகவும், பாதாள குழுக்களை இலக்கு வைத்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போரின் பின்னர் வடக்கில் பல நிதி நிறுவனங்கள் ஊடாக தவணை கொடுப்பனவு முறையில் வாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களுக்கு தவணை கட்டணம் செலுத்த தவறிய சந்தர்ப்பங்களில், இத்தகைய சமூகவிரோத குழுக்களின் உதவியை நாடி வாகனங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கில் செயற்படும் பாதாள குழுக்களில் ஆவா குழுவே முன்னிலையில் இருப்பதாகவும், அதன் தலைவனாக கருதப்படும் விநோதன் என்பவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வடபகுதியில் ஆவா எனப்படும் குழுவை அரசாங்கப் படைத்தரப்பே உருவாக்கியதாக, மூத்த அதிகாரி ஒருவரை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.