யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு புலன்விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று காவல்த்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
காவல்த்துறை ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணையாளர்கள் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே காவல்த்துறை ஆணைக்குழுவின் செயலாளர் இந்தத் தகவலைத் வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில், காவல்த்துறை ஆணைக்குழுவும் தனித்து விசாரணையொன்றை மேற்கொண்டு வருவதுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்த்துறையினரும் பிரத்தியேகமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே காவல்த்துறை ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணையாளர்கள் நடத்திய விசாரணையின் அறிக்கையும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு அறிக்கையும் அடுத்தவாரம் கிடைக்கும் என காவல்த்துறை ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலை பாரதூரமான குற்றச்செயல் என்பதால், அது தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் காவல்த்துறை ஆணைக்குழுவுக்கு இல்லை என்றும் காவல்த்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்த்துறையினர் முறையாக நடாத்துகின்றனரா என்பதை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும், அதற்கமைய தமது ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.