வடபகுதியில் வாள் வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவ்ங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
யாழ். மல்லாகம் பகுதியில் இரண்டு குழுக்களிடையே இன்று ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் அளவெட்டி, நரிஜிட்டான் முகரி பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சுன்னாகம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கத்திகளுடன் சென்ற குழு ஒன்று, நரிஜிட்டான் முகரி பகுதியில் இருந்த குழுவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், சம்பவத்தை பெரும்திரளான மக்கள் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் காரணமாக இருவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பலரும் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் தெல்லிப்பளை காவல்த்துறையினர் முச்சக்கர வண்டி ஒன்றையும், மோதலுடன் தொடர்புபட்ட சிலரையும் கைது செய்துள்ளதுடன், தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த மோதல் இடம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது கார் ஒன்றும் முற்றாக அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், மோதலின் இறுதியிலேயே காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் இன்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்மற்றும் விபத்து காரணமாக கடந்த 3 மணிநேரத்தில் வவுனியா வைத்தியசாலையில் 10பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு காவல்த்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலான 3மணிநேரத்தில் வவுனியாவின் பல பகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆறு பேரும், இதே காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக 04 பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மதினா நகர் பகுதியில் தமிழ் இளைஞர்கள் செலுத்திச்சென்ற முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டபோது அப்பகுதி முஸ்லீம் இளைஞர்கள் உதவிக்காக சென்றுதாகவும், இதனையடுத்து சிறிது நேரத்தில் பூந்தோட்டம் பகுதியில் இருந்துவந்த இளைஞர் குழுவொன்று உதவிபுரிந்த முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில்ஈடுபட்டதன் காரணமாக தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லீம் இளைஞர் ஒருவரும் காயமடைந்ததாக வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா, கற்குழி பகுதியில் தமிழ் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் காவல்த்துறையால் கைது செய்யப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல வவுனியாவின் பூந்தோட்டம், மதீனா நகர், கற்குழி, பம்பைமடு உள்ளிட்ட பலபகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.