நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, சுயாட்சியையும், சனநாயகத்தையும், நியாயத்தையும் வழங்கவில்லை என்றால், அரசாங்கத்திற்கு எதிராக வடக்கில் நடைபெறும் எழுச்சியை நிறுத்த முடியாது என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், தமிழ் மக்கள் கொலை செய்துக்கொண்டு தாமும் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைமைக்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும் நடத்தி வருதுடன் அங்கு போராட்ட குழுக்களும் உருவாகி வருவதாகவும், பல்வேறு அரசியல் நோக்கங்கள் வெளியில் வருகின்றன என அரசாங்கத்தின் தலைவர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ள நிலையில், ஏன் அப்படி நடக்கின்றது என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்கள் வாக்குறுதி வழங்கியது போல, அரசியல் தீர்வை வழங்குவதில்லை எனவும், வடக்கில் இராணுவத்தை திரும்பப்பெற்று சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இராணுவத்தை சிறிது சிறிதாக அகற்றி விட்டு, அதற்கு பதிலாக ஆயுதங்களை தாங்கிய காவல்த்துறையினரை அரசாங்கம் அங்கு நிலை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இராணுவத்துக்கு பதிலாக தற்போது காவல்த்துறையினர் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் நடமாடி வருவதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், வடக்கில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தினருக்கு பதிலாக காவல்த்துறையின் அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ள விக்ரமபாகு கருணாரத்ன, இராணுவத்தினருக்கு பதிலாக காவல்த்துறையினரை நிலை நிறுத்துவதாக இருந்தால், தமிழ் மொழியையும் கலாசாரத்தை அறிந்த தமிழர்கள் அதிகளவில் காவல்த்துறையில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.