யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்படவுள்ள காணிகள் அடங்கியுள்ள பிரதேசத்தில் இராணுவத்தின் இரண்டு முகாம்கள் இருக்கும் எனவும், இந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், பலாலி கன்டோன்மென்ட் பிரதேசத்துக்குள் இருந்த 1,927.6 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 2010 ஒக்ரோபர் தொடக்கம், 2015 வரையான காலப்பகுதியில், 5,258.38 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவித்துள்ளதாகவும், இதுவரையில் இராணுவம் 7,185.98 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைத்துள்ளதாகவும அவர் கூறியுள்ளார்.
நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள மைத்திரிபால சிறிசேன, கீரிமலையில் படையினரால் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு கையளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வின் போதே, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 454ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அறிவி்ப்பையும் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.