நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என்றும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து்ளார்.
காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்றுபிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் இறுதியில் மோசமான போராக மாறி நாட்டுக்கு மிகப்பெரும் அழிவைக் கொண்டுவந்ததாகவும், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலும் கருத்து வெளியிட்ட அவர், வடக்கில் அல்லது தெற்கில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது அனைவரதும் பொறுப்பு எனவும், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை போர் நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி, யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ், 100 வீடுகளைக்கொண்டதாக, மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கையளிக்கப்பட்ட இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் 26 ஆண்டுகள் அகதி முகாம்களில் தங்கியிருந்த 100 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளினால் சனாதிபதிக்கு ஒரு சிறப்பு நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டதுடன், தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இந்த வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்தமை தொடர்பாக சனாதிபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு சிறப்புக் குறிப்பும் சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை மைலிட்டி பிரதேச பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 454 ஏக்கர் காணிகள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான உத்தியோகபூர்வ கடிதம் மாவட்ட செயலாளரிடம் இன்று சனாதிபதியினால் கையளிக்கப்பட்டுள்ளது.