சீனாவின் நிலக்கரிச் சுரங்க விபத்தில் சிக்கிய 33பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஒன்றினுள், கடந்த திங்கட்கிழமை திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீப்பற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்த 33 சுரங்க பணியாளர்கள் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை 15 பேர் உயிரிழந்து விட்டதாகவும், எஞ்சியுள்ள 18 பேரை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
எனினும் எஞ்சிய 18 பேரையும் மீட்கமுடியாது போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்ட நிலையில், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த இந்த சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட 33 சுரங்கப் பணியாளர்களும் உயிரிழந்து விட்டனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், இதுபோன்ற சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.