ஆயிரக்கணக்கான ரொரன்ரோ மாணவர்களின் போக்குவரத்தினை இன்று பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட, பாடசாலை பேரூந்துகளின் சேவை நிறுத்தப் போராட்டம் இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாடசாலை பேரூந்து சாரதிகள் சங்கத்திற்கும், ரொரன்ரோ பாடசாலைகள் சபைக்கும் இடையே இடம்பெற்றுவந்த பேச்சுக்களில், நேற்று நள்ளிரவு தாண்டியும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், இன்று பாடசாலைப் பேரூந்துகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இன்று காலை ஆறு மணிக்கு சற்று முன்னதாக இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இறுதி நேரத்தில் சேவை நிறுத்தப் போராட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.
எனவே ரொரன்ரோ அரசர்ங்கப் பாடசாலைகள் மற்றும் ரொரன்ரோ கத்தோலிக்க பாடசாலை மாணவர்களுக்கான பேரூந்துகள் அனைத்தும் வழக்கம் போல சேவையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறாக இன்று இந்த பேரூந்துகளின் சேவை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றிருக்குமானால், சுமார் 18,000 மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக இணக்கப்பாட்டினை அடுத்து, பாடசாலை பேரூந்துகள் அனைத்தும் இன்று சேவையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், எவ்வாறன இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பிலோ, பின்னரும் சேவை நிறுத்தப் போராட்டங்களுக்கான சாத்தியம் உள்ளதா என்பது தொடர்பிலோ மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.