ஒன்ராறியோவில் அனைத்து மக்களும் தமக்கான அடிப்படை வருமானத்தினை பெறுவதனை உறுதிப்படுத்தும் வகையிலான முன்மாதிரித் திட்டம் ஒன்றினை ஏற்படுத்துவதற்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான திட்டதினை உருவாக்குவதற்கு எவ்வாறான அடிப்படைகள் பின்பற்றப்பட வேண்டும், அடிப்படை குறைந்த அளவு சம்பளம் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட வேண்டும், எவ்வாறானவர்கள் இந்த திட்டத்தில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பொதுமக்கள் விடையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் ஆகக்குறைந்த மாதாந்த வருமானமாக 1,320 டொலர்கள் கிடைக்க வகை செய்ய வேண்டும் எனவும், அதிலும் உடற்குறை உடையோருக்கு மேலதிகமாக 500 டெலர்கள் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கும் திட்டம் ஒன்றினை முன்னாள் செனட்டர் ஹெக் சீகல் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரால் முன்வைக்கப்பட்டுள்ள விவாதப் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, தற்போது மக்களிடமும் அதற்கான ஆலோசனைகள் கோரப்படுகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த முன்மாதிரித் திட்டத்தினை தயார்நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மாநில அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.