ஆவா குழுவை காரணம் காட்டி, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கையும் அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர், குமாரபுரம் படுகொலை வழக்கு அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தீர்ப்பளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆவா குழுவிற்கு அரசியல் பின்னணி உள்ளது என்றால், அரசியல் காரணங்களை வைத்து இதற்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதிலே தாமதம் காட்டுவதை இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு போர் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தற்போது அதற்கு அவசியம் இல்லையென்றும் அமைச்சர் ராஜித கூறியுள்ளதாக குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், அவ்வாறாயின் போர்க்காலத்தில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆயுதக் குழுக்களுடன் இணைந்து இலங்கை படையினர் படுகொலைகளை நடத்தியதை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒப்புக்கொள்கின்றாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கூறி வருவதையும் சிவாஜிலிங்கம் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கூறுவது போன்று வடக்கில் சிங்கள மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவ்வாறு ஏற்படுமாயின் அதனைத் தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நிற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தமது கடமையை சரியாக செய்யவேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.