வட மாகாணத்தின் முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு என்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விக்கினேஸ்வரனை தெரிவு செய்தமை மிகச் சரியான முடிவு என்பது இன்றும் உணரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற நாளிதழ் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்த இரா. சம்பந்தன், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வினையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.
அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் இராஜதந்திர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், நாட்டின் ஆட்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அது வரையில் நாடு சர்வாதிகார போக்கில் போய்க்கொண்டிருந்தததாகவும், நாடு முழுவதையும் பொறுத்தவரையில் சர்வாதிகாரம் நிகழ்ந்ததாகவும், முன்னைய ஆட்சியாளர்கள் தாம் விரும்பியவாறு அரசியல் அமைப்பினை மாற்றி பயங்கரமான நிலமையை ஏற்படுத்தியதாகவும் அவர் விபரித்துள்ளார்.
ஆனால் தற்போது அந்த பயங்கரவாத நிலையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பங்களிப்பினைச் செய்தார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இன்றும் சரியான முறையில் அனைத்து கருமங்களிலும் தாம் திருப்தியடையவில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறையில் வாடும் அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு, இராணுவ குடியேற்றங்கள், புனர்வாழ்வுகள், இராணுவ மயமாக்கல்கள் போன்றவற்றினைப் பொறுத்தவரையில் பாரிய குறைபாடுகள் இன்னமும் காணப்படுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தினைப் பொறுத்தவரையில், பல அரசியல் சாசனங்கள் மக்களின் அபிலாஷைகளுடன் நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர் ,அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.