பிரித்தானியப் பிரதமர் தெரசா மே மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
டெல்லியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடியும், பிரித்தானியப் பிரதமர் தெரசா மே-யும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியா பிரதமர், வருங்காலங்களில் வர்த்தக தடைகளைத் தகர்த்து இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர், ஐரோப்பாவுக்கு வெளியே தமது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தெரசா மே, ஐரோப்பாவுக்கு வெளியிலான பயணத்துக்கு தாம் இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் தனிச்சிறப்பான நல்லுறவு என்றும் விபரித்துள்ளார்.
இதேவேளை இன்றைய இந்த நிகழ்வில் உரையாற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா – பிரித்தானியா இடையேயான வர்த்தக உறவு வலுவாக இருப்பதாகவும், பிரித்தானியாவில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இத்துடன் இரண்டு நாடுகளின் வர்த்தக ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அறிவியல் உலகளாவியதாக இருக்க முடியும் என்ற போதிலும், தொழில்நுட்பம் உள்ளூர் திறனாக இருக்க வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.