அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் முதலில் வாக்குப்பதிவு ஆரம்பமானதைத் தொடர்ந்து, ஏனைய பல பகுதிகளிலும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய இந்த அதிபர் தேர்தலில் சுமார் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்கு தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர் என்றும், சுமார் 4 கோடி பேர் முன்கூட்டிய வாக்குப் பதிவின் மூலம் வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவிக்க்பபடுகிறது.
இந்த தேர்தலில் சனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நேரக் கருத்துக்கணிப்புக்கள் ஹிளாரி கிளிண்டன் முன்னிலையில் இருப்பதைக் காட்டியுள்ள போதிலும், அவருக்கும் டிரம்ப்பிற்கும் இடையிலான இடைவெளி குறைவானதாகவே உள்ளதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஊழல் மிக்க அரசியல் முறையை எதிர்ப்பதற்கு இந்த தேர்தலே இறுதி வாய்ப்பு என்று புளோரிடாவில் இறுதிக் கட்டப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப் தமது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.
அவ்வாறே பிட்ஸ்பர்க்கில் (Pittsburgh) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய சனநாயகக் கட்சி வேட்பாளர் கிளிண்டன், அனைவரையும் உள்ளடக்கிய, கனவுகள் நிறைந்த, கனிவான அமெரிக்காவை உருவாக்குவதற்கு வாக்களிக்குமாறு தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுமார் 40, 000 பேர் வரையில் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் ஹில்லரி கிளிண்ட்டனுடன் அவரது கணவர் பில் கிளிண்டன் மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரும் கலந்துகொண்டு ஹில்லரி கிளிண்ட்டனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.