வௌ்ளவத்தையின் சில பகுதிகளில் பதிவுகளை மேற்கொள்வதற்காக, காவல்த்துறையினரால் நேற்று படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போர் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும் இவ்வாறான காவல்த்துறைப் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் காவல்த்துறை பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காவல்த்துறை பதிவு இனிமேல் இடம்பெறாது என்றவாறான வாக்குறுதிகள் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையிலேயே, இவ்வாறான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு்ள்ளதுடன், வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புகள் சிலவற்றுக்குக்கே இவை விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், எதன் அடிப்படையில் அந்தத் தொடர்மாடிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை எந்தவொரு பிரதேசத்திலும், எந்தவொரு நபரிடமும், அவர்களின் இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்க காவல்த்துறைக்கு முடியும் என்றும், ஆட்களைப் பதிவு செய்யுமாறு கோருவதற்கு, காவல்த்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் இடமுள்ளதாகவும் காவல்த்துறை அதிகாரியும் காவல்த்துறை ஊடகப்பிரிவின் பணிப்பாளருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது வௌ்ளவத்தை தொடர்மாடி குடியிருப்புகளில் உள்ளவர்களிடம் மட்டுமன்றி, ஏனைய சகல வீடுகளிடமும் பதிவு செய்யுமாறு கோரப்படும் எனவும், இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும், இது வழமையான ஒரு நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வெள்ளவத்தைப் காவல்த்துறையினரால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் படிவங்களைப் பூரணப்படுத்த வேண்டாமெனவும், பூரணப்படுத்துவதற்கான தேவை கிடையாது என்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காவல்த்துறையினரால் இவ்வாறான படிவங்கள் விநியோகிக்கப்படுவதாக அவருக்கு மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அது தொடர்பான அறிவிப்பொன்றை விடுத்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெள்ளவத்தை காவல்த்துறைப் பிரிவில் விநியோகிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கோரும் படிவங்களை, அங்கு குடியிருப்பவர்களால் பூரணப்படுத்தப்பட வேண்டியதில்லை எனவும், வெள்ளவத்தை காவல் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேமன்னவுக்கும், பதில் காவல்த்துறை மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கும், இது தொடர்பில் தான் பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.