காணாமல் போன இரண்டு சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களது காரும் மிசிசாகாவில் உள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று மிசிசாகா பகுதியில் உள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து கார் ஒன்று மீட்கப்பட்ட நிலையில், அந்த கார் காணாமல் போன சகோதரர்கள் இறுதியாக பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
22 வயதான ஹம்சா கான் மற்றும் 20 வயதான ஷாருக்கா கான் ஆகிய சகோதரர்களே கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியிலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் குறித்த அந்த இரவு மிசிசாகாவின் தோமஸ் வீதிப் பகுதியில் இறுதியாக காணப்பட்டதாகவும், அவர்கள் BWCJ 918 என்ற இலக்கத்தகட்டைக் கொண்ட 2011ஆம் ஆண்டுத் தயாரிப்பான வெள்ளி நிற BMW ரக காரை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த அந்தக் கார் மிசிசாகாவின் Ninth Line மற்றும் Thomas Street பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் நேற்று மாலையில் தெரிவித்தனர்.
அத்துடன் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அது குறித்த மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.