முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் 65ம் அமர்வு யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத கருத்தடைகள் நடைபெற்றிருந்த நிலையி்ல் அவ்வாறான சட்டவிரோதக் கருத்தடைகள் இப்போதும் இடம்பெறுவதாகவும், அதிக கருத்தடை செய்த வைத்தியருக்குப் பரிசு கூட வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிளிநொச்சி – வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத கருத்தடை தொடர்பாக தாங்கள் சாட்சிகளை பெற சென்றிருந்தபோது, அங்கே கடற்படையினர் தம்மை அச்சுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் சில சாட்சிகளை பெற்று போர்க்குற்ற சாட்சியாக அனுப்பியிருந்ததாகவும், இதேபோல் சட்டவிரோத கருத்தடை தொடர்பாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்றும், அதன் பின்னர் அவருடைய கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், அவர் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், சட்டவிரோத கருத்தடை 2013ம் ஆண்டு நடைபெற்றதுடன், அது மத்திய அரசாங்கத்தினால் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அநீதி இழைக்கப்பட்டமையானது உன்மையே என்றும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெறுவதனை ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினால், இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்