அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும், 2017ஆம் ஆண்டுக்கானதுமான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, இந்த வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் இருக்கின்ற நிலையில், அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கான சிறப்பு வேலைத்திட்டங்கள் எவையும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தமிழ் மக்களுக்கும், தமக்கும் ஒரு பாரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டு மக்களினது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பல வேலைத்திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற போதிலும், நடைமுறையில் அந்த வேலைத்திட்டங்கள் எடுத்துக்காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வரவு செலவுத் திட்டம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை முழுமையாக ஓரங்கட்டிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவும் குறை கூறியுள்ளார்.
இதன் மூலம் சனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.