போரில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து இந்த கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகெர்ணடு நேற்று உரையாற்றிய அவர், போரினால் உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நாடாளுமன்றில் அகவணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்ட அவர், உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்கு கடந்த ஆட்சியில் தடைவிதிக்கப்பட்டதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 30 ஆண்டுகால போரினால் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் எனவும், இது தவிர போரினால் உயிர்நீத்தவர்களுக்கு அனைத்துலக சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் அமைவாக நட்டஈடு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக தனது மரியாதையை நாடாளுமன்றத்தில் செலுத்துவதாகவும், நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கம் தமது உரிமைக்காக போராடும் சமுதாயத்தை அடக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள, பௌத்த மேலாதிக்க சிந்தனையுடன் சிறுபான்மை மக்களை இரண்டாம் தரப்பாக நடத்த அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டிய அவர், எமது மக்களை ஏமாற்ற முயன்றால் மக்கள் வீதிக்கு இறக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களை தொடர்ந்து அடக்கி வைத்து இன நல்லிணக்கம் குறித்து பேசுவது நகைப்புக்குரியது எனவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில், இதனை எப்படி மக்கள் நல வரவு செலவுத்திட்டமாக கருத முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போர் முடிந்து ஏழரை ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களின் காணிகளைச்சூறையாடுதல் வடக்கு-கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான எதுவித சிந்தனையும் இல்லாத சூழல், காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாகவும் கடத்தப்பட்டோர் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாகவும் எந்தவிதமான பொறுப்புக்கூறலுமற்ற ஒரு அரசாங்கம் ஆட்சிப்பீடத்தில் இருக்கின்ற நிலை மட்டுமல்லாது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட, அதனை நிராகரிக்கின்ற ஆட்சியாளர்களே அரசியாசனத்தில் உள்ளதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணம் முழுவதும் புதிய புதிய விகாரைகளும் புதிய புத்தர் சிலைகளும் நிறுவப்படுதல், இராணுவ அதிகாரிகளின் பெயர்களை வீதிகளுக்குச் சூட்டுதல், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கக்கூடிய வகையில் வடக்கு-கிழக்குக் கடலில் சிங்கள மீன்வர்களின் அத்துமீறலுக்கான அனுமதி என்பன, தற்போதய அரசாங்கத்திலும் காணப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாரிய போர் இடம்பெற்று பல இலட்சம் மக்களை இழந்து, பாரிய அழிவுகள் ஏற்பட்டு, பொருளாதாரத்தில் முடங்கிப்போயிருக்கக்கூடிய வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும், போர் விமானங்களுக்கும், தாங்கிகளுக்கும், படகுகளுக்கும், கப்பல்களுக்கும் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனுக்கு வரிசெலுத்திக் கொண்டிருக்கின்ற துயரத்தையும் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.