மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடித் தனம் தொடர்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தேரர் இன்று காலை தமது ஆதவாளர்களுடன் மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பண்குடாவெளி அரசடி பகுதிக்கு சென்றிருந்ததுடன், அங்கு தனியார் ஒருவருக்கு சொந்தமான 9 ஏக்கர் காணியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி அந்த பகுதியிலேயே முகாமிட்டதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் உட்பட பிரதேச மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடன் அங்கு சென்றதுடன், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும், அதனால் ஏராளமான காவல்த்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த 9 ஏக்கர் காணியின் உரிமையாளர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதவான், பௌத்த பிக்குவின் செயற்பாட்டிற்கு தடையுத்தரவு பிறப்பித்ததுடன், குறித்த பகுதியில் பௌத்த பிக்கு உட்பட எவருக்கும் நடமாட அனுமதிக்க கூடாது என்று காவல்த்துறையினருக்கும் கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்த நிலையில், காவல்த்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே குறித்த பிக்குவிற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலகர்கள் கறுப்புப் பட்டியணிந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை இன அரச அலுவலர்களையும், சிறுபான்மை சமூகங்களையும் இழிவுபடுத்தும் வகையில் குறித்த பிக்கு நடந்து கொண்ட நிலையிலேயே இந்த போராட்டதை மேற்கொண்ட அவாகள், பிக்குவின் நடவடிக்கைக்கு தங்களின் காட்டமான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் சுமார் 350 இற்கு மேற்பட்ட கிராம அலுவலர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணொளி உதவி: நன்றி நியூஸ் வண்