தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக புதிது, புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி, தேசிய இனத்தின் மூலாதாரமான சமய கலாசாரத்தை இல்லாமல் செய்யும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு போர் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்காகவே தற்போது தமிழர்கள் மீது நேரடியாக போரை நடாத்தாமல், பாதுகாப்புத் தரப்பினரையும், பௌத்த பிக்குகளையும் பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் பெரும் எடுப்பில் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் நிறுவி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், வடக்கில் நயினாதீவு, இரணைமடு, மாங்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் அம்பாறை மாணிக்க மடு, திருகோணமலை ஆத்திமோட்டை சாம்பல்தீவு சல்லிச்சந்தி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிது புதிதாக அமைக்கப்படுகின்ற புத்தர் சிலைகளை மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்பாகவே மக்கள் பார்க்கின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த இடங்களில் புதிதாக இந்து ஆலயங்கள் அமைப்பதைக்கூட தாம் எதிர்ப்பதாகவும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக ஒன்றை அமைப்பதாயின் அது அங்குள்ள மக்களின் விருப்பத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்
தற்பொழுதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதனை நிராகரிக்காதபோதிலும், புதிய அரசியலமைப்பிலும் இதே நிலைமை காணப்படுமாயின் அது மோசமான சூழ்நிலையையே ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்
இந்த விடயத்தில் அரசாங்கம் துணிச்சலுடன் செயற்படும் வரையில் புத்தர் சிலைகள் தமிழர் பகுதிகளில் வைக்கப்படுவதையும், அளவில் சிறிய ஏனைய தேசிய இனங்கள் அச்சத்துடன் வாழும் சூழலையும் மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மத ரீதியாக மக்களை பீதியில் வைத்திருப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளபோதிலும், சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் வடக்கில் தங்கியிருக்கும் நிலையில், அவர்கள் அங்கு விவசாயம், சுற்றுலா விடுதி, மீன்பிடி என பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதுடன், அவற்றை அங்குள்ள மக்களுக்கு விற்பனை செய்தும் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி சிவில் பாதுகாப்பு படையினர் முன்பள்ளிகளை நடத்தி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், உலகத்தில் எந்த நாட்டில் இராணுவத்தினர் முன்பள்ளிகளை நடத்தி வருகின்றனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை ஒரு வன்முறையை தூண்டும் நடவடிக்கையாக மாறாதா எனவும் கேள்வியெழுப்பியுள்ள அவர், எம்மை ஆக்கிரமிக்க வந்தவர்களே இராணுவத்தினர் என்ற உணர்வில் இவ்வாறான குழந்தைகள் வளர்க்கப்பட்டால், எதிர்வரும் காலத்தில் அவர்கள் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இறுதிப் போரில் தமது குடும்பத்தினரால் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்ட்ட பலருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை எனவும், அவர்கள் உயிருடன் மீண்டும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காணாமல் போனோர்களின் பெற்றோர், மனைவிமார் மற்றும் பிள்ளைகள் காணப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறி்பாக யோகரத்தினம் யோகி, புதுவை இரத்தினதுரை, பாப்பா, இளந்திரையன், எழிலன், மலவரன் உள்ளிட்ட 41 பேரும் அவர்களின் சிலரின் குடும்ப உறுப்பினர்களும், மனைவிமாரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் நேரடியாக சரணடைந்தமைக்கான சாட்சிகள் உள்ள நிலையில், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பதிலளிப்பது யார் எனவும் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.