மோசமான நிலநடுக்கத்தால் பாதிப்புகைள எதிர்கொண்டுள்ள நியூசிலாந்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் கனேடிய போர்க் கப்பலான HMCS வன்கூவர் ஈடுபட்டுள்ளது.
நியூசிலாந்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் உட்பட மேலும் சில நிலநடுக்கங்கள் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள கடற்கரையோர நகரம் ஒன்றுடனான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு சுமார் 700பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த அந்த கடற்பகுதியை அண்டிய பிராந்தியத்தில் வேறு ஒரு பணியில் ஈடுபட்டிருந்த கனேடிய போர்க் கப்பலான HMCS வன்கூவர், நிலநடுக்கத்தை அடுத்து உதவிக்காக அந்த பகுதிக்கு விரைந்துள்ளது.
நியுசிலாந்தின் தென்பிராந்திய தீவினை நேற்று சென்றடைந்த கனேடிய போர்க் கப்பல், அங்கு தேவைப்படும் அவசரகால மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்த பிராந்தியத்திற்கான நீர், எரிபொருள், போக்குவரத்து உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் நடவடிக்கையில் குறித்த இந்த கனேடிய போர்க் கப்பலும், அமெரிக்க போர்க் கப்பல்களும் ஈடுபட்டுளு்ளதாக நியூசிலாந்து இராணுவத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவின் HMCS வன்கூவர் கப்பலில் உள்ள நவீனரக உலங்குவானூத்தியும் குறித்த இந்த அவசரகால மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.