யாழ்ப்பாணத்தில் இன்றும் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் வீதியில் கிடந்ததாக கூறப்படுகிறது.
குறித்த நபர் வாள் வெட்டுக் காயத்துடன் வீதியில் கிடந்ததை அந்த வீதியால் சென்ற ஒருவர் அவதானித்த நிலையில், அவர் மானிப்பாய் காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் காவல்த்துறையினர் குறித்த நபரை மீட்டு உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதி கடையொன்றில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதற்றம் நிலவியதை அடுத்து, மீண்டும் மோதல் இடம்பெறுவதைத் தவிர்க்கும் வகையில் முழங்காவில் காவல்த்துறையினர் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படகிறது.
இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்த்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை எதிர்வரும் 30ஆம் நாள் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆவா குழு என்ற பெயரில் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 11 சந்தேக நபர்களும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த 11 பேரும் நீதிமன்றிற்கு இன்று அழைத்து வரப்பட்டபோது, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த அவர்களின் பெற்றோர்கள், அப்பாவிகளான தமது பிள்ளைகளை ‘ஆவா’ குழுவினர் என பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்துள்ளதாக கண்ணீர் சொரியத் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், உண்மையில் ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.